NATIONAL

முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பு- அதிக முதலீடுகள் மலேசியாவுக்கு வர வாய்ப்பு

புத்ராஜெயா, ஜூன் 20- மலேசியா மீதான நம்பிக்கை முதலீட்டாளர்கள்
மத்தியில் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் மேலும் அதிகமான
முதலீடுகள் நாட்டிற்கு வருவதற்கான உந்து சக்தியாக இது விளங்குகிறது
என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி
ஃபாட்சில் கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த 2023 லண்டன் தொழில்நுட்ப வார
கூட்டத்தில் கலந்து கொண்ட முதலீட்டாளர்கள் தம்மிடம் தெரிவித்த
தகவலின் அடிப்படையில் இந்த நம்பிக்கையைத் தாம் வெளிப்படுத்துவதாக
இன்று இங்கு நடைபெற்ற அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்
உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 12 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த லண்டன்
முதலீட்டு வார நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு
துறைகளில் 830 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டுக் கடப்பாட்டை
மலேசியப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்கள் மத்தியில் நேர்மறையான எண்ணத்தை நாம்
விதைத்துள்ளோம். மலேசியாவின் இலக்கு, அரசியல் நிலைத்தன்மை
மற்றும் ஆற்றல் ஆகியவை முதலீட்டுக்கான குவிய மையமாக
விளங்குகிறது என அவர்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.

முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது விரைவில்
சாத்தியமாகும். அதிகமான முதலீடுகள் நாட்டிற்கு வரும் என அவர்
சொன்னார்.


Pengarang :