SELANGOR

சிலாங்கூர் தேர்தல் – கடுமையான போட்டிக்கு மத்தியிலும் வெற்றி பெறுவோம் – அமானா கட்சி நம்பிக்கை

கோல சிலாங்கூர் ஜூன், 22- சிலாங்கூர் மாநிலத்தில் விரைவில்
நடைபெறவிருக்கும் தேர்தலில் கடுமையான போட்டி நிலவினாலும்
அதனை எதிர்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாக பார்ட்டி அமானா
நெகாரா (அமானா) கூறியுள்ளது.

இந்த தேர்தலில் தாங்கள் இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்
வகையிலான விவகாரங்களைத் தொடாமல் ஆரோக்கியமான முறையில்
பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமானா கட்சியின் வியூக இயக்குநர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

அவர்களுக்கு டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் நிறைய பயனர்கள்
உள்ளதால் இந்த தேர்தல் பிரசாரம் கடுமையானதாக இருக்கும்.
அவர்களின் பிரசாரம் மதம் மற்றும் இனம் சார்ந்ததாக மட்டும் இருக்கும்.
இது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் கடினமான ஒன்றாகும் என்றார் அவர்.

கொள்கை மற்றும் அமலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
ஆரோக்கியமான முறையில் நாங்கள் பிரசாரம் செய்வோம். இன
நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காதீர்கள். இது பொறுப்பற்றச்
செயலாகும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள கம்போங் பாரிட் மஹாங்கில் விபத்தின் காரணமாக
நிரந்தர முடத்தன்மைக்கு ஆளான முகமது டேனியல் மூசா (வயது 22)
என்ற இளைஞருக்குச் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின்
உதவித் தொகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது கைவசம் உள்ள தொகுதிகள் உள்பட சிலாங்கூர் மாநிலத்தில்
எட்டு தொகுதிகளில் அமானா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக
ஜூல்கிப்ளி மேலும் சொன்னார்.

எனினும், தொகுதி பங்கீடுத் தொடர்பான இறுதி முடிவுகளை கட்சியின்
தலைமைத்துவமே வெளியிடும் என்று கோல சிலாங்கூர் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :