NATIONAL

ஐ.ஜி.பி. மாற்றப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல- உள்துறை அமைச்சர் விளக்கம்

புத்ராஜெயா, ஜூன் 22- ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட போலீஸ்
அதிகாரிகள் அல்லது அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணி நீக்கம்
செய்யப்படலாம் அல்லது சேவை காலம் குறைக்கப்படலாம் என்று
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்
கூறினார்.

டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா வகித்து வந்த தேசியப் போலீஸ் படைத்
தலைவர் (ஐ.ஜி.பி.) பதவிக்கு துணை ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ ரஸாருடின்
ஹூசேன் நியமிக்கப்பட்டது வழக்கமான நடைமுறையாகும் என்று அவர்
தெரிவித்தார்.

இதில் சர்ச்சை என்று எதுவும் இல்லை. வேறு எதையும்
அனுமானிக்காதீர்கள். மாட்சிமை தங்கிய பேரரசரை முதலில் நானும்
பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சந்தித்தோம். இந்த
விவகாரம் சமூகமான முறையில் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

இது குறித்து நான் டான்ஸ்ரீ அக்ரில் சானியிடமும் பேசியுள்ளேன். இன்று
கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பதவி ஏற்பு மற்றும்
ஒப்படைப்பு சடங்கை நடத்தவுள்ளோம். இதில் சர்ச்சைக்குரிய விஷயம்
எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இங்குள்ள உள்துறை அமைச்சில் ஊடக ஆசிரியர்களுடன் உள்துறை
அமைச்சரின் எனும் பிரத்தியேகச் சந்திப்பு நிகழ்வின் போது அவர்
இவ்வாறு சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பதவி ஓய்வு பெற்ற
டான்ஸ்ரீ அக்ரில் சானி மேலும் ஈராண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்
தேசிய போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின்
பதவிகாலம் இவ்வாண்டு அக்டோபர் 4ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.


Pengarang :