SELANGOR

பாயா ஜெராஸ் தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 387 குடும்பங்களுக்கு வெ.100,000 நிதியுதவி

ஷா ஆலம், ஜூன் 23- பாயா ஜெராஸ் தொகுதியில் கடந்த மார்ச் மாதம்
ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த 387
குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கம்போங் குபு காஜா (265 குடும்பங்கள்), கம்போங் பாயா ஜெராஸ் ஹிலிர்
(41 குடும்பங்கள்), தாமான் பாயா ஜெராஸ் பெர்மாய் (38 குடும்பங்கள்),
கம்போங் பாயா ஜெராஸ் டாலாம் (24 குடும்பங்கள்), கம்போங் பாயா
ஜெராஸ் தெங்கா (2 குடும்பங்கள்), கம்போங் மெர்பாவ் செம்பாக் (17
குடும்பங்கள்) ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு 96,750 வெள்ளி
வழங்கப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது கைருடின்
ஓத்மான் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதில் இந்த நிதி
ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம். அதற்கும் மேலாக எதிர்காலத்தில் பாயா ஜெராஸ் பகுதியில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது குறித்து வட்டார மக்களுடன் விவாதிக்கும் நோக்கிலும் இந்த சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் குறிப்பாகப் பாயா ஜெராஸ் தொகுதியில் மக்கள் நலனுக்கான
திட்டங்களை முன்னெடுப்பதை இந்த சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது
என்றார் அவர்.

முன்னதாக அவர், பாயா ஜெராஸ் தெங்கா, எம்பிஎஸ்ஏ மண்டபத்தில்
நடைபெற்ற வெள்ள உதவி நிதியளிப்பு மற்றும் வெள்ளத் தடுப்புத்
தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

அந்த வெள்ளப் பேரிடரின் போது தற்காலிக நிவாரண மையங்களில்
அடைக்கலம் புகுந்தவர்களுக்கு 500 வெள்ளியும் நிவாரண மையம்
செல்லாதவர்களுக்கு 250 வெள்ளியும் உதவித் தொகையாக
வழங்கப்பட்டது.


Pengarang :