NATIONAL

ரிங்கிட் மலேசியா மதிப்பிழந்து வரும் சிக்கலை சமாளிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது – பிரதமர்

நீலாய், ஜூன் 25 – ரிங்கிட் மலேசியா மதிப்பிழந்து வரும் சிக்கலை சமாளிக்கும் முயற்சியில், நாட்டின் வட்டி விகிதங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நாட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்லாமல் இருக்க அரசாங்கம் சமநிலையை அடைய முயல்கிறது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ரிங்கிட் வீழ்ச்சியானது நாட்டின் குறைந்த வட்டி விகிதங்கள் உடன் தொடர்புடையது என்றும், அரசாங்கம் வட்டி விகிதங்களை மிக அதிகமாக உயர்த்தினால், அது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சுமையாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

“என்னிடம் RM1 மில்லியன் இருந்தால், அதை வங்கியில் போட விரும்புகிறேன். இச்சூழலில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா என்ற தேர்வு உள்ளது. சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் அதிக வட்டி விகிதங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

“எனவே, அப்பணத்தை இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் சேமிக்க தேர்வு செய்கிறேன். இதுதான் இப்போது எங்களின் பிரச்சனை,” என்று அவர் யுனிவர்சிட்டி சைன்ஸ் இஸ்லாம் மலேசியாவில் (யுஎஸ்ஐஎம்) அன்வாரை  சந்திப்போம்  (தெமு அன்வார்) நெகிரி செம்பிலான்  நிகழ்ச்சியின் போது கூறினார்.

அட்ரியானா என்ற படிவம் ஆறு மாணவியின் கேள்விக்கு அன்வார் பதிலளித்தார், அம்மாணவி நாட்டின் நாணயத்தை வலுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை அறிய விரும்பினார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், ரிங்கிட் சரிவை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் சீனாவை மிஞ்சும் அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றார்.

“ரிங்கிட் மதிப்பு சரிவு, குறைந்த முதலீடு மற்றும் குறைந்த வளர்ச்சியால் நமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்தால் வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. எங்கள் முதலீடு முதல் நான்கு மாதங்களில் RM 71 பில்லியனாக உள்ளது. பல சலுகைகளுடன் முதலீடுகளை திரும்ப கொண்டு வருவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

“ஜொகூரில் நிதி மையத்தை அமைப்பது ஒரு வழி என்று நான் கூறுகிறேன். மேலும் பலவற்றை கடந்த வாரம் நான் அறிவித்தேன். அதுமட்டுமில்லாமல், இன்னும் பல நடவடிக்கைகளை நாங்கள் யோசித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பது எளிதானது அல்ல என்று அன்வார் ஒப்புக்கொண்டார். ஏனெனில் இந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற வதந்திகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்னும் நம் நாட்டில் உறுதியற்ற தன்மை நிகழ்வதாக  நம்புகின்றனர்.

“மக்கள் (முதலீட்டாளர்கள்) அவர்களை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது நல்லது. அன்வார் இன்னும் தலைமை தாங்கினால், அரசாங்கம் ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மற்றவர்கள் பொறுப்பேற்றால், அவர்கள் வாபஸ் பெறுவார்கள். நான் ஒற்றுமை அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்யவில்லை, ஆனால் இது உண்மை, ”என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :