SELANGOR

சந்தையை விட 30 விழுக்காடு குறைந்த விலை- மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கும் மலிவு விற்பனை

உலு சிலாங்கூர், ஜூன் 26- சந்தையை விட 30 விழுக்காடு குறைவான
விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும்
மலிவு விற்பனை பொது மக்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து
வருகிறது.

தரமானப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்காக இந்த
விற்பனை நடைபெறும் இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள தாம்
தவறுவதில்லை என்று சப்ரி ஜக்காரியா (வயது 45) கூறினார்.

ரவாங்கிலுள்ள எனது வீட்டிற்கு அருகே ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை
நடைபெறும் இடங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு சிலாங்கூர் மாநில
மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) பேஸ்புக் பக்கத்தை தாம் அடிக்கடி
வலம் வருவது வழக்கம் என்று அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை மக்களின் சுமையைக் குறைப்பதில் பெரும்
பங்காற்றி வருவதால் இந்த விற்பனைத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட
வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று இங்குள்ள டத்தாரான் நியாகா செரெண்டாவில் நடைபெற்ற உலு
சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின்
போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்ள சுமார் 800 பேர் காலை 8.00
மணி முதல் வரிசையில் காத்திருந்திருந்தனர். பெருநாளை முன்னிட்டு
தற்போது நடத்தப்படும் இந்த விற்பனையில் 2,000 கோழிகள் 900 தட்டு
முட்டைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

இதனிடையே, குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பயன் பெறுவதற்கு
ஏதுவாக இந்த மலிவு விற்பனை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று
உலுயாம் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசியான ஜோ புவா (வயது 41)
கூறினார்.


Pengarang :