NATIONAL

இன்ஸ்பெக்டர் ஷீலாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள்- தற்காலிகப் பணி நீக்கம்

கோலாலம்பூர், ஜூன் 27- அண்மைய காலமாகச் சமூக ஊடகங்களில் பெரும்
சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வந்த பயிற்சி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு
எதிராக தற்காலிகப் பணி நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட்
அமான் உயர்நெறி மற்றும் தர பின்பற்றல் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ
அஸ்ரி அகமது கூறினார்.

ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார் என்ற அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு
எதிராக செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இன்ஸ்பெக்டர் ஷீலா மீது குற்றவியல் சட்டத்தின் 509 பிரிவின் கீழ் இரு
குற்றச்சாட்டுகளும் 506வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும்
சுமத்தப்பட்டுள்ளது.

அந்த காவல் துறை அதிகாரிக்கு எதிராக 1967ஆம் ஆண்டு போலீஸ்
சட்டத்தின் 78வது பிரிவின் கீழ் தற்காலிகப் பணி நிறுத்த ஆணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு
அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போலீஸ் அதிகாரிக்கு உரிய
அனைத்து அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும்
என்று அஸ்ரி குறிப்பிட்டார்.

லான்ஸ் கார்ப்ரல் பதவியில் உள்ள போலீஸ்காரர் மற்றும் இளைஞர்
ஒருவரை அவமதித்தது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளையும் மூதாட்டி
ஒருவரை அச்சுறுத்தியது தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் 35 வயதான
ஷீலா எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :