NATIONAL

இரண்டு நாள் வருகை மேற்கொண்டு பிரதமர் லாவோஸ் பயணம்

வியன்டியன், ஜூன் 27- இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக லாவோஸ்
நாட்டிற்கு நேற்று வந்து சேர்ந்தார்.

அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்கவிருக்கும் லாவோஸ்
நாட்டிற்கு அன்வார் மேற்கொள்ளும் முதல் வருகையாக இது அமைந்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் துணைவியார்
டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரை ஏற்றி சென்ற
சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 5.50 மணிக்கு (மலேசியா நேரப்படி
மாலை 6.50 மணிக்கு) வாட்டே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பிரதமர் தம்பதியரை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி
அப்துல் காடீர், லாவோஸ் பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி
அலோன்ஸாய் சோன்னாலாத் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று இரவு லாவோஸ் நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகளின்
தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின் போது
சமயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

இன்று அன்வார் மற்றும் லாவோஸ் பிரதமர் சிப்பாண்தோனுக்கும் இடையே
இருதரப்பு பேச்சுவார்த்தை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த
பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியா மற்றும் லாவோஸ் நிறுவனங்களுக்கு  இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தாகும் நிகழ்வை இரண்டு பிரதமர்களும் பார்வையிடுவர்.


Pengarang :