NATIONAL

போக்குவரத்துக் குற்றங்களைத் தடுக்க கோலாலம்பூரில் மாபெரும் சாலைத் தடுப்பு இயக்கம்

கோலாலம்பூர், ஜூன் 27- போக்குவரத்துக் குற்றங்களைத் தடுக்கும்
விதமாக கோலாலம்பூர் மாநகர போலீசார் இதர அமலாக்கத்
துறையினருடன் இணைந்து மிகப்பெரிய அளவிலான வாகனச் சோதனை
இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த சாலைத் தடுப்புச் சோதனை இயக்கம் வரும் ஜூலை மாதம் முதல்
தேதி தொடங்கி ஒரு மாதக் காலத்திற்கு நீடிக்கும் என்று கோலாலம்பூர்
போலீஸ் தலைவர் டத்தோ முகமது சுஹைலி முகமது ஜின் கூறினார்.

இந்த சாலைத் தடுப்புச் சோதனையில் சாலை போக்குவரத்து விசாரணை
மற்றும் அமலாக்கத் துறை, சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.),
கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின்
அமலாக்கப் பிரிவினரும் பங்கு கொள்வர் என்று அவர் சொன்னார்.

இந்த சோதனை இயக்கத்தில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின்
அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய சுமார் 1,000 பேர் பங்கு
கொள்வர். இது தவிர இதர அமலாக்க நிறுவன அதிகாரிகள் தத்தம் துறை
சார்ந்த குற்றங்களைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றார்
அவர்.

இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் காவல் துறையினர்
மற்றும் இதர அமலாக்கத் துறையினரின் ஒத்துழைப்புடன்
மேற்கொள்ளப்பட்ட சாலை சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கும்
இயக்கத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சோதனையில் போதைப் பொருள் தடுப்பு போலீசாரும் பங்கு
கொள்வர் எனக் கூறிய அவர், போதைப் பொருள் தொடர்பான
குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது அத்துறையினர் உரிய நடவடிக்கை
மேற்கொள்வர் என்றார்.


Pengarang :