NATIONAL

மாநிலத் தேர்தல்- மூன்று மாநிலச் சட்டமன்றங்கள் இன்று கலைக்கப்படுகின்றன

கோலாலம்பூர், ஜூன் 28- மாநிலத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள
நிலையில் நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. தேர்தலுக்கு
வழி விடும் வகையில் பினாங்கு மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்கள்
தங்கள் சட்டமன்றங்கள் இன்று அதிகாரப்பூர்வமாகக் கலைப்படும் என
அறிவித்துள்ளன.

கிளந்தான் இம்மாதம் 22ஆம் தேதியும் சிலாங்கூர் 23ஆம் தேதியும்
சட்டமன்றத்தைக் கலைத்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் ஆட்சிக்
கலைப்புக்கு தயாராகி வருகின்றன.

ஆட்சியைக் கலைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பினாங்கு,
கெடா, திரங்கானு ஆகிய மாநிலங்கள் நேற்று வெளியிட்டுள்ள
வேளையில் இத்தகைய அறிவிப்பை இன்னும் வெளியிடாத ஒரே
மாநிலமாக நெகிரி செம்பிலான் இருந்து வருகிறது.

நாற்பது தொகுதிகளைக் கொண்ட பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படுவது
தொடர்பான அறிவிப்பை மாநில முதலமைச்சர் சௌ கூன் இயோ நேற்று
வெளியிட்டார். இம்மாநிலத்தின் ஐந்தாண்டு தவணை வரும் ஆகஸ்டு
மாதம் 2ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில் 35 நாட்களுக்கு
முன்னதாகவே மாநில அரசு சட்டமன்றத்தைக் கலைத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் கூட்டணி 33 தொகுதிகளையும்
பாரிசான் நேஷனல் இரு தொகுதிகளையும் பெர்சத்து நான்கு
தொகுதிகளையும பாஸ் ஒரு தொகுதியையும் வென்றன.

இதனிடையே 32 தொகுதிகள் கொண்ட திரங்கானு மாநிலச் சட்டமன்றம்
ஐந்தாண்டு தவணை முடிவதற்கு இரு தினங்கள் முன்னதாக அதாவது
இன்று கலைக்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி 22 இடங்களைப் பெற்று பாரிசான்
நேஷனலிடமிருந்து மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றியது.

முப்பதாறு தொகுதிகள் கொண்ட கெடா மாநிலம் இன்று சட்டமன்றம்
கலைக்கப்படுவதாக அறிவித்துள்ள வேளையில் 45 தொகுதிகளைக்
கொண்ட கிளந்தான் மாநிலம் கடந்த 22ஆம் தேதி சட்டமன்றத்தைக்
கலைத்தது.


Pengarang :