NATIONAL

கோல திரங்கானு தொகுதியில் பாஸ் வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது- தேர்தல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கோல திரங்கானு, ஜூன் 28 – நடந்து முடிந்த 15வது பொது தேர்தலில் கோல திரங்கானு
நாடாளுமன்ற  தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் டத்தோ அகமது அஸ்மாட் ஹசிம்
பெற்ற வெற்றி செல்லாது என்று இங்குள்ள தேர்தல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

15 ஆவது பொதுத் தேர்தலில் வாக்காளர்களை கவரும் நோக்கில் ஊழல் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதை பாரிசான் நேஷனல் வேட்பாளரான டாக்டர் முகமது ஜுபியர்
எம்போங் வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக நீதிபதி டத்தோ ஸ்ரீ முகமது ஃபிருஸ் ஸப்ரில்
தனது தீர்ப்பில் கூறினார்.

மனுதாரர் தன்னை ஒரு சாட்சியாக முன்னிலைப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் தேர்தல்
குற்றவியல் சட்டத்தின் 36 வது பிரிவின் கீழ் கோல திரங்கானு தொகுதிக்கான தேர்தல்
முடிவுகள் செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இதர ஆதாரங்கள்
போதுமானவையாக உள்ளன என நீதிபதி  குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் பிரதிவாதி மனுதாரருக்கு 50,000 வெள்ளியை வழங்க வேண்டும் என
உத்தரவிட்ட நீதிபதி, இந்த தீர்ப்பை எதிர்த்து மனு செய்ய பிரதிவாதிக்கு 14 நாள் அவகாசம்
வழங்கினார்.

1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ்  பதினைந்தாவது பொதுத் தேர்தலில் கோல
திரங்கானு தொகுதியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவினை ரத்து செய்யக்கோரி போல
திரங்கானு அம்னோ கடந்த ஜனவரி மூன்றாம் தேதி இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்திருந்தது.

பதினைந்தாவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது
நவம்பர் 15 மற்றும் 17ஆம் தேதிகளில் ஐ-பென்ஷன் ஐ- பெலியா ஐ-சிஸ்வா போன்ற மாநில
திட்டங்களின் வாயிலாக நிதி உதவி அளித்ததன் மூலம் பாஸ் கட்சி வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கியதாக தனது மனுவில் திரங்கானு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமது சைட் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 15வது பொதுத் தேர்தலில் அஸ்மாட் 40,907 வாக்குகள் பெரும்பான்மையில் தன்னை
எதிர்த்துப் போட்டியிட்ட இதர மூன்று வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.
இதனிடையே, மாராங் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சித்
தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றி செல்லும் என்று
திரங்கானு தேர்தல் நீதிமன்றம் அறிவித்தது.

ஹா அவாங்கின் வெற்றியை எதிர்த்து தேசிய முன்னணி வேட்பாளர்
ஜஸ்மிரா ஓத்மான் செய்த தேர்தல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.


Pengarang :