NATIONAL

சீபீல்டு தோட்ட ஆலயத்தில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலிருந்து 17 பேர் விடுவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 28- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சுபாங்
ஜெயா, சீபீல்டு தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கலவரத்தில்
ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 17 பேரையும் வழக்கிலிருந்தும்
குற்றச்சாட்டிலிருந்தும் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று
விடுதலை செய்தது.

புரோசிகியூஷன் தரப்பு விசாரணையின் முடிவில்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதை
அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து 17 பேரையும்
எதிர்வாதம் செய்ய அழைக்காமலேயே விடுவிப்பதாக மாஜிஸ்திரேட்
முகமது இஸ்கந்தார் ஜைனோல் தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த வழக்கில் ஆஜரான சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காணத்
தவறியதோடு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சிகளின்
வாக்குமூலங்களும் முரணாக இருந்ததாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் கத்தி போன்ற
ஆயுதங்களை சாட்சிப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்பிக்க அரசுத் தரப்பு
தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து ஆயுதங்களும் சம்பவ இடத்திலிருந்து சாட்சிகளால்
சேகரிக்கப்பட்டவையே தவிர குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து
கைப்பற்றப்பட்டவை அல்ல என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி விடியற்காலை 2.00
மணிக்கும் 5.00 மணிக்கும் இடையே கலவரத்தில் ஈடுபட்டதோடு
அபாயகரமான ஆயுதங்களையும் வைத்திருந்ததாக 24 முதல் 47 வயது
வரையிலான அந்த 17 பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

2018-ஆம் ஆண்டு நவம்பர் 25 ஹிண்ட்ராப் பேரணி நாளைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா சீ
ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய வளாகத்தில் திடீரென்று கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் தொடர்புடைவர்கள் என 17 இந்தியர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு
நடைபெற்று வந்த நிலையில், சம்பந்தப்பட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இஸ்கந்தார் ஜைனோல், 17 பேர் மீதான
குற்றம் சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால் சம்பந்தப்பட்ட அனைவரையும்
விடுதலை செய்வதாக அறிவித்தார்.


Pengarang :