NATIONAL

பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், ஜூன் 28: ஹரி ராய ஹஜியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் இன்று காலை கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையை நோக்கி செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் பாதையில், கோம்பாக் டோல் பிளாசாவிலிருந்து கெந்திங் செம்பா மற்றும் புக்கிட் திங்கி, பெந்தோங் வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தபாவிலிருந்து கோபேங், கோபேங்கிலிருந்து சிம்பாங் பூலை, ஈப்போவிலிருந்து ஜெலப்பாங் மற்றும் மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து சுங்கை பேராக் (ஆர்&ஆர்) பகுதி வரை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது,” என்று அவரைத் தொடர்பு கொண்ட போது கூறினார்.

மேலும், பாடாங் ரெங்காஸ் முதல் ஆர்&ஆர் புக்கிட் கந்தாங் வரையிலும், புக்கிட் தம்புன் முதல் ஜூரு டோல் பிளாசா வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“தலைநகரில் இருந்து தெற்கே செல்லும் பாதையில், போக்குவரத்து இன்னும் சீராக இயங்குகிறது, மேலும் நண்பகலில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும் என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணைய எதிர்பார்க்கிறது. மேலும் முன்மொழியப்பட்ட பயண அட்டவணையைப் பொதுமக்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :