SELANGOR

கல்விக் கட்டண உதவித் திட்டத்தின் கீழ் 1,817 உயர்கல்வி மாணவர்களுக்கு வெ.76 லட்சம் நிதியுதவி

ஷா ஆலம், ஜூன் 28- உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு
உதவுவதற்காக மாநில அரசு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 76 லட்சம்
வெள்ளிக்கும் அதிகமானத் தொகையைச் செலவிட்டுள்ளது.

இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு வரை குறைந்த வருமானம்
பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 1,817 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக
பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்
கூறினார்.

உயர்கல்விக் கூடங்களில் பயிலும் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவதற்காக பத்தாண்டுகளுக்கு
முன்னர் இந்த திட்டத்தை மாநில அரசு தொடக்கியதாக அவர் சொன்னார்.

நிதி நெருக்கடி காரணமாக உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை
மாணவர்கள் இழந்து விடக் கூடாது என நாங்கள் கருதுகிறோம். இதன்
அடிப்படையில் முடிந்த வரை வசதி குறைந்த மாணவர்களுக்கு
உதவிகளை வழங்கி வருகிறோம் என அவர் சிலாங்கூர் கினியிடம்
தெரிவித்தார்.

டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் குறைந்த வருமானம்
பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த உயர்கல்விக்
கட்டண உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அவர்
குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் சுமார் 20 லட்சம் வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 502 மாணவர்கள் பயன்பெறுவதற்குரிய
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட நிதியளிப்பு நிகழ்வு
கடந்த வாரம் நடைபெற்ற வேளையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட
நிதி வழங்கும் நிகழ்வு வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில்
நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடியபட்சம் 3,000
வெள்ளியும் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடியபட்சம்
5,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது. இந்த தொகை சம்பந்தப்பட்ட
உயர்கல்விக் கூடங்களுக்கு நேரடியாக அனுப்பபடும்.


Pengarang :