NATIONAL

தேர்தல் பிரச்சாரங்களில் அவதூறு, இன விவகாரங்களைத் தவிர்ப்பீர்- அரசியல் கட்சிகளுக்கு நூருல் இசா வேண்டுகோள்

ஷா ஆலம்,  ஜூலை 3- மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிரணிக்கு எதிராக அவதூறு பரப்புவதையும் இன விவகாரங்களை எழுப்பவதையும் நிறுத்திக் கொள்ளும்படி அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மைய காலமாகப் பரவி வரும் அளவுக்கு அதிகமான பொய் செய்திகள் நாட்டின் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தாம் அஞ்சுவதாக பி.கே.ஆர். கட்சியின் உதவி தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.

ஆக்ககரமான விமர்சனங்களாக அல்லாமல் பொய் செய்திகள் ரூபத்தில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து நான் அஞ்சுகிறேன் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாக்குதல் நடத்தப்படுவது இயல்புதான்.

எனினும் இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டக்கூடிய அம்சங்களை உள்ளடக்கிய அவதூறான தாக்குதல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். என்றார் அவர்.

முன்னதாக அவர், இங்குள்ள செக்சன் 4, சூராவ் ராவுடா அல்-முத்தாகினில்
ஹஜ்ஜூப் பெருநாள் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.
வரும் மாநில தேர்தலில் பினாங்கு மற்றும் கெடாவில் தாம் களம் இறங்கி பிரச்சாரத்தில்
ஈடுபடவிருப்பதாக முன்னாள் பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

எதிர்வரும் மாநிலத் தேர்தலில் பினாங்கு மற்றும் கெடாவில் பிரசாரத்தில் ஈடுபடும்படி
கட்சியின் மத்திய தேர்தல் இலாகா என்னைப் பணித்துள்ளது. பக்கத்தான்
ஹராப்பான் கூட்டணிக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநிலத்திலும் நான்
பிரசாரம் செய்யவுள்ளேன் என்றார் அவர்.

மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் 14வது சட்டமன்றம் கடந்த மாதம்
23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. சிலாங்கூர் தவிர்த்து
பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு ஆகிய
மாநிலங்களிலும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.


Pengarang :