SELANGOR

சிலாங்கூரில் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை இவ்வாண்டு 2.5 கோடியாக உயரும்- மந்திரி புசார் நம்பிக்கை

கோல லங்காட், ஜூலை 3- இவ்வாண்டில் சிலாங்கூருக்கு வருகை புரியும்
சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகமாக
இருக்கும் என மதிப்பிடப்படுவதாக மந்திரி புசார் கூறினார்.

கடந்தாண்டு 2 கோடியே 20 லட்சம் சுற்றுப்பயணிகளைச் சிலாங்கூர்
மாநிலம் ஈர்த்துள்ள நிலையில் மாநிலத்தில் புதிய சுற்றுலாத் துறைகள்
திறக்கப்பட்டதன் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் உயர்வு
காண்பதற்கு சாத்தியம் உள்ளது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
தெரிவித்தார்.

சுற்றுலாத் துறை அபரிமித வளர்ச்சி கண்ட ஆண்டாக கடந்த 2022ஆம்
ஆண்டு விளங்குகிறது, காரணம், பாங்கி, ஷா ஆலம் மற்றும் சன்வேயில்
தீம் பார்க் எனப்படும் கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா ஈர்ப்பு
மையங்களை நாம் கொண்டுள்ளோம் என அவர் சொன்னார்.

கடந்தாண்டு 2 கோடியே 20 லட்சம் உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளும் 32
லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் மாநிலத்திற்கு வருகை
புரிந்தனர். சுற்றுலாத் துறை பல்வகைப்படுத்தபட்டுள்ளதால் இவ்வாண்டில்
அந்த எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சம் பேராக அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதும் இந்த
சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை உயர்வு காரணமாக அமையும் என்று
இங்குள்ள பண்டா கமுடா கோவ்வில் ஸ்ப்லாஷ்மானியா நீர் பூங்காவை
திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

கடந்தாண்டு 2 கோடியே 20 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்த்ததன் மூலம்
நாட்டில் அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை புரியும் மாநிலம் என்ற
பெயரை சிலாங்கூர் தக்க வைத்துக் கொண்டது.


Pengarang :