NATIONAL

15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே விபத்துகளில் அதிகம் சிக்குகின்றனர்- ஜே.பி.ஜே. தகவல்

அலோர்ஸ்டார், ஜூலை 3- சாலை விபத்துகளில் சிக்கியவர்களில்
குறிப்பாக உயிரிழப்போரில் அதிகமானோர் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட
மோட்டார் சைக்கிளோட்டிகளாக உள்ளதை சாலை போக்குவரத்து
இலாகாவின் (ஜே.பி..ஜே.) தரவுகள் காட்டுகின்றன.

இந்த வயதுக்குட்பட்டத் தரப்பினர் மத்தியில் சாலை பாதுகாப்பு
தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக சாலை போக்குவரத்து
இலாகாவின் முதன்மை அமலாக்க இயக்குநர் டத்தோ லோக்மான்
ஜெமஹான் கூறினார்.

முப்பதைந்து முதல் 60 வயது வரையிலான தரப்பினர் கடுமையான
விபத்துகளில் சிக்குவது குறைவாக உள்ளதை விபத்துகள் தொடர்பான
புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதே சமயம், 15 முதல் 35
வயதுக்குட்பட்டவர்கள் சாலையை அதிகம் பயன்டுத்துபவர்களாக
உள்ளதும் அந்த தரவுகளின் வழி தெரியவந்துள்ளது என்று அவர்
சொன்னார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற 2023 ஹஜி பெருநாள் சாலை பாதுகாப்பு
இயக்கத்தையொட்டி நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.

பதினைந்து முதல் 35 வயது வரையிலான தரப்பினர் வானமோட்டும்
லைசென்ஸ் இல்லாதது, சாலை வரி புதுப்பிக்கப்படாதது, காப்புறுதி
இல்லாதது போன்ற குற்றங்களை அதிகம் புரிவதும்
கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

கடந்த மாதம் 27,28 மற்றம் ஜூலை 1ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட
சாலைத் தடுப்புச் சோதனைகள் குறித்து கருத்துரைத்த அவர்,
இக்காலக்கட்டத்தில் 55,904 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் அவற்றில் 37 விழுக்காட்டு வாகனங்கள் பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளது கண்டறியப்பட்டதாகவும் சொன்னார்.


Pengarang :