SELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

உலு சிலாங்கூர், ஜூலை 3- பொது மக்கள் குறிப்பாக கிள்ளான்
பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் கோரிக்கையை ஏற்று சிலாங்கூரில் பொது
போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மத்திய அரசின்
ஒத்துழைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

பொது போக்குவரத்து சேவைக்கான தேவை அதிகரித்து வருவதைக்
கருத்தில் கொண்டு பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான
நடவடிக்கை அடுத்தாண்டு முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும்
என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் தற்போது அன்றாடத் தேவைக்கு சுமார் 2,000
பஸ்கள் பயன்படுத்தப்படும் வேளையில் இங்கு அதிகரித்து வரும்
தேவையை ஈடு செய்ய மேலும் அதிகமான பஸ்கள் தேவைப்படுகின்றன.
மாநில அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையும்
போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

புதிய பஸ்களை வாங்குவதில் முதலீடு செய்வது தொடர்பில் தனியார்
பஸ் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதிகரித்து வரும்
அவசரத் தேவையை ஈடுசெய்வதற்காக இவ்விவகாரம் தொடர்பில்
சிலாங்கூர் அரசுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என அவர் சொன்னார்.

இன்று இங்கு மைபிஏஸ்வி 2023 திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

வீடமைப்பு பகுதிகளில் பொது போக்குவரத்து சேவைக்கான தேவை
அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மினி பஸ் சேவையை
மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும்
அந்தோணி லோக் சொன்னார்.

அதிக மக்கள் தொகை கொண்ட பல வீடமைப்பு பகுதிகள் உள்ளன. தங்கள்
பகுதிக்கும் பஸ் சேவை ஏற்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி
குடியிருப்பாளர்கள் கோருகின்றனர். சிலாங்கூரில் பொது போக்குவரத்தை
மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை
அமல்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறோம் என்றார்
அவர்.


Pengarang :