SELANGOR

விபத்தில் சிக்கியவருக்குச் சிகிச்சைக்கான செலவுகளை தன்னார்வலர் அமைப்பு ஏற்கும்

ஷா ஆலம், ஜூலை 4- இரு வாரங்களுக்கு முன்னர் புக்கிட் செந்தோசா 2,
தாமான் செரோஜா சாலை சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் காயமுற்ற
பெண்மணிக்குச் சிகிச்சைக்கான செலவுகளை ஈடுசெய்வதில் சிலாங்கூர்
சுகாதார சமூகத் தன்னார்வலர் அமைப்பின் பத்தாங் காலி பிரிவு உதவும்.

நோர்யாத்தி மாட்ஜின் என்ற அந்த பெண்ணுக்கு ஸக்கத் வாரியத்தின்
வாயிலாக கிச்சைக்கான செலவுத் தொகையாக 4,000 வெள்ளி
வழங்கப்பட்டுள்ளதாகப் பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியின்
ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

தனது இரு பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது தாம்
விபத்தில் சிக்கியதாக அந்த பெண் ஜியாரா காசே நிகழ்வின் போது
அப்பெண் தங்களிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

துரதிர்ஷ்டசவசமாக அவர்களில் யாரும் சிலாங்கூர் அரசின் இலவசப்
பொதுக் காப்புறுதித் திட்டத்தில் (இன்சான்) இன்னும் பதிவு செய்யவில்லை.
இந்த காப்புறுதித் திட்டத்தில் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி பொது
மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

அதிக விபத்துகள் நிகழும் அபாயம் உள்ள இடமாக விளங்கும் அந்த
சாலை சந்திப்பை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களுடன்
தாம் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் அடிப்படை வசதிகள் துறையின் கவனத்திற்குக் கொண்டுச்
செல்லப்படும். விபத்துகளைக் குறைப்பதற்கு ஏதுவாக அங்கு வேகத் தடை
மேடுகளை அமைப்பது அல்லது வாகனங்கள் “யு“ வளைவு எடுப்பதை
தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :