NATIONAL

நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்

கோலாலம்பூர், ஜூலை 4 – நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆறுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது அல்லது அங்கு முகாமிடும்போதும் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீர் மட்டம் தவிர, நீரின் நிறம், நீரோட்டம் மற்றும் மிதக்கும் குப்பைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குடிமைத் தற்காப்புத் துறையின் தலைமை ஆணையர் அமினுர்ரஹீம் முகமது கூறினார்.

“இவை வரவிருக்கும் ஆபத்தை குறிக்கும் சில மாற்றங்கள் ஆகும். சமீபத்தில் திரங்கானுவில் ஜெராம் ஆயர் புத்தே நீர்வீழ்ச்சி ஏற்பட்ட சம்பவம் போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க இது போன்ற மாற்றங்களை கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

“அத்தகைய தளங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் முன்னறிவிப்பு செய்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்தின் வானிலையை பற்றித் தெரிந்து கொள்ளுமாறு முகாமிடும் இடங்கள் ஆற்றங்கரையில் இருந்து வெகு தொலைவில் திடமான நிலத்தில் இருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

பலத்த காற்று மற்றும் கனமழையால் நிலச்சரிவு, நீர் பெருக்கங்கள், கட்டமைப்பு சேதம் மற்றும் மரங்கள் விழும் சம்பவங்களால் பொழுதுபோக்கு பகுதிகள் மட்டுமின்றி, பொது மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்றார்.

– பெர்னாமா


Pengarang :