NATIONAL

ஜனநாயகத்தை அதிகம் கடைபிடிக்கும் மாநிலம் சிலாங்கூர்- ஆய்வில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 5- மாநிலச் சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை
அதிகமாக கடைபிடிக்கும் மாநிலங்களின் பட்டியலில் பக்கத்தான்
ஹராப்பான் தலைமையிலான சிலாங்கூர் அரசு முன்னிலை வகிக்கிறது.
அறுபது அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வில்
இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றம் கடைபிடிக்கும் ஜனநாயக நடைமுறை 69
விழுக்காடாக உள்ள வேளையில் 60 விழுக்காட்டுடன் பேராக் மாநிலமும்
54 விழுக்காட்டுடன் நெகிரி செம்பிலான் மாநிலமும் உள்ளதாக சிவில்
சமூக அமைப்பின் (சி.எஸ்.ஒ.) நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற
சீர்திருத்தப் பிரிவுத் தலைவர் தர்மா பிள்ளை கூறினார்.

அந்த ஜனநாயக கண்காணிப்பு அமைப்பின் இந்த ஆய்வில் பகாங்
மாநிலத்தில் ஜனநாயக அமலாக்கம் 53 விழுக்காடாகவும் பினாங்கில் 52
விழுக்காடாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவு கோலை நிறைவு செய்ததன் மூலம் பெருமிதம்
கொள்ளக்கூடிய அளவிலான அடைவு நிலையை சிலாங்கூர் சட்டமன்றம்
பதிவு செய்துள்ளது. தொகுதிகளுக்குச் சம அளவிலான நிதி ஒதுக்கீட்டை
வழங்குவதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் அது
விளங்குகிறது என்று தர்மா பிள்ளை சொன்னார்.

இது தவிர, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சட்டமன்றக் கூட்டத்
தொடரை நீண்ட நாட்களுக்கு அதாவது 22 நாட்களுக்கு நடத்தும்
மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தர்மா பிள்ளை
இவ்விபரங்களை வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களை அமல்படுத்தத் தவறியதால்
ஜனநாயகக் குறியீட்டில் மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாநிலங்களாக பெர்லிஸ் (34 விழுக்காடு), திரங்கானு (37 விழுக்காடு), சபா (40 விழுக்காடு) ஆகியவை உள்ளன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :