NATIONAL

போதைப் பொருள் கடத்தல் வழக்கிலிருந்து பெண் குமாஸ்தா விடுதலை

கோலாலம்பூர் ஜூலை 5- போதைப் பொருள் கடத்தல் வழக்கிலிருந்து பெண் குமாஸ்தா ஒருவரை இங்குள்ள உயர்நீதிமன்றம் நேற்று விடுவித்தது.

போதைப் பொருளை வைத்திருந்தது தொடர்பில் சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளில் இருந்தும் சித்தி ஆயிஷா நோர்ட்டின் (வயது 35) என்ற அந்தப் பெண்மணி விடுவிக்கப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹமிட் இந்த தீர்ப்பை வழங்கினார்.

புரோசிகியூஷன் தரப்பில் ஆஜரான சாட்சிகள் வழங்கிய சாட்சியங்களை நீதிமன்றம் ஆராய்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவருடன் கைது செய்யப்பட்ட முக்கிய சாட்சியை அதாவது அவரின் கணவரை அரசு தரப்பு சாட்சியாகக் கொண்டு வர தவறிவிட்டது. இதுவே இந்த வழக்கில் மிகவும் பலவீனமான ஒரு நிலையை ஏற்படுத்தியது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

கருப்பு நிற உடை அணிந்திருந்த சித்தி ஆயிஷா இந்தத் தீர்ப்பை கேட்டதும் மகிழ்ச்சியில்
புன்னகைத்தார். அரசு தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் கோ ஐ ரினி இந்த வழக்கை நடத்திய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்து வழக்கறிஞர் மன்வீர் சிங் ஆஜர் ஆனார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி  ஜாலான் ஈப்போ 5வது மைலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 59.98 கிராம் போதைப் பொருளைக் கடத்தியதாக 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் பிரிவு 39(பி)(1)(ஏ) இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :