SELANGOR

பள்ளிகளின் உள்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் RM250,000 மேல் ஒதுக்கீடு – சுங்கை ரமால் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 7: சுங்கை ரமால் தொகுதி, அப்பகுதியில் உள்ள பல பள்ளிகளின் உள்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் RM250,000 க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.

2018 முதல் பழுதுபார்க்கப் பட்டு மேம்படுத்தப்பட்ட பள்ளி வசதிகளில் கழிப்பறைகள், திடல்கள், அரங்குகள் மற்றும் சபைக்கூடல் போன்றவை அடங்கும் என்று சுங்கை ரமால் தொகுதி உறுப்பினர் மஸ்வான் ஜோஹர் கூறினார்.

“முன்னதாக, கூட்டாட்சி அளவில் பல நிர்வாக மற்றும் தலைமை மாற்றங்கள் இருந்தன. அதனால் பள்ளி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

“எனவே இதுவரை பள்ளிக் கழிவறை பழுது பார்த்தல், மண்டபத்தை மேம்படுத்துதல் போன்ற பல தேவைகளை நான் நிறைவேற்றினேன்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சுங்கை ரமால் தொகுதிகளில் வசிப்பவர்களின் கல்வி, நலன் மற்றும் சுகாதாரம் ஆகிய அம்சங்களுக்கு தான் முன்னுரிமை வழங்குவதாக மஸ்வான் கூறினார். எனவே, அதனை முன்னிட்டு பல உதவிகள்  வழங்கப்படுகின்றன என்றார்.

“சுங்கை ரமால் தொகுதி, கடந்த ஆண்டு முதல் இப்போது வரை படிவம் ஆறிலிருந்து பல்கலைக்கழக நிலை வரையிலான மாணவர்களுக்குச் சுமார் RM100,000 மதிப்புமிக்க மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

“இத்திட்டம் B40 குடும்பங்களுக்கு உட்பட்டது மட்டுமல்ல, அதிகமான பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

“சமீபத்தில், பள்ளிக்குத் திரும்பும் உதவி பெற்ற 135 பேருக்குத் தாபோங் ஹாஜி கணக்குகளைத் திறப்பதற்காக RM1,350 நன்கொடையாக வழங்கப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :