NATIONAL

போலி பங்கு முதலீட்டுத் திட்டத்தை நம்பி 92,540 வெள்ளியை இழந்தார் குமாஸ்தா

குவாந்தான், ஜூலை 10- சமூக ஊடகங்களில் வெளியான இல்லாத
முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தை நம்பி பெண் குமாஸ்தா
ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான 92,540 வெள்ளியை இழந்தார்.

அந்த 52 வயது குமாஸ்தா பேஸ்புக் பதிவு ஒன்றில்
காணப்பட்ட பங்கு முதலீடு தொடர்பான விளம்பரத்தைக் கண்டு அதன்
இணைப்பை சொடுக்கியதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
யாஹ்யா ஓத்மான் கூறினார்.

அந்த விளம்பரத்தில் காணப்பட்ட சலுகைகள் மற்றும் கவர்ச்சிகமான
வருமானத்தைக் கண்டு மதிமயங்கிய அப்பெண் கடந்த நான்கு
மாதங்களில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் 12 முறை பணத்தைச்
செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

வாக்குறுதியளிக்கப்பட்டபடி வருமானம் கிடைக்காததைத் தொடர்ந்து தாம்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் இது தொடர்பில் குவாந்தான்
மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததாக அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர்
மேலும் சொன்னார்.

சமூக ஊடங்களில் வெளியாகும் முதலீடு தொடர்பான விளம்பரங்களை
நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக்
கொண்டார்.


Pengarang :