SELANGOR

எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாட்டிலான வாகனமில்லா தின நிகழ்வில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 10- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில்
நேற்று இங்குள்ள ஜாலான் எஸ்எஸ்16/1இல் உள்ள ஏயோன் பிக் சுபாங்
ஜெயா மற்றும் சுபாங் பெரேட் பேரங்காடிகள் முன் நடைபெற்ற
வாகனமில்லா தின நிகழ்வில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து
சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் பிரதான அங்கமாக இரண்டு முதல் ஒன்பது வயது
வரையிலானச் சிறார்களுக்கு எண்டுரேன்ஸ சேலஞ் வி2.0 மற்றும் சுபாங்
ஜெயா ரன் பைக் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக சுபாங்
ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு கூறியது.

இவை தவிர, சைக்கிளோட்டம், ஓட்டப்பந்தயம், செனாம்ரோபிக்,
கூடைப்பந்து, அம்பு எறிதல், பிளையிங் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு
நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று அது அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.

மேலும், இந்த வாகனமில்லா தின நிகழ்வில் கராவோக்கே, காலைச்
சிற்றுண்டி விழா, இலவச மருத்துவப் பரிசோதனை, மறு சுழற்சித் திட்டம்,
அதிர்ஷ்டக் குலுக்கு போன்ற அங்கங்களுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

முன்பு செலாமாட் பாகி சுபாங் ஜெயா எனும் பெயரில் நடைபெற்று வந்த
இந்த நிகழ்வு தற்போது பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்த நிகழ்வின்
சிறப்பு அங்கமாக மலேசிய பொது தற்காப்பு படையின் அவசர கால உதவி
தொடர்பான கண்காட்சியும் சீலாட் கண்காட்சியும் இடம் பெற்றன.

மேலும், சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில்
பாதுகாப்பு தொடர்பான கண்காட்சிக்கும் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின்
சுகாதாரத் துறையின் ஏற்பாட்டிலான ஏடிஸ் கொசு ஒழிப்பு கண்காட்சிக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Pengarang :