SELANGOR

ரவாங் உணவு வங்கித் திட்டத்தின் வழி 1,500கும் மேற்பட்ட பி40 குடும்பங்கள் பயன்

செலாயாங், ஜூலை 11- ரவாங்
தொகுதியிலுள்ள 1,500க்கும் மேற்பட்ட
குறைந்த வருமானம் கொண்ட பி40
குடும்பங்கள் கடந்த ஆண்டு அக்டோபர்
மாதம் முதல் உணவு வங்கி உதவியைப்
பெற்றுள்ளனர்.

ரவாங் தொகுதி சேவை மையம் மற்றும்
பல வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய
அரிசி, பீகூன், மாவு, எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற
சமையல் பொருட்கள் சம்பந்தப்பட்டத்
தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக ரவாங்
தொகுதியின் நடப்பு உறுப்பினரான சுவா
வேய் கியாட் கூறினார்.

கிராமத் தலைவர்கள், குடியிருப்போர்
சங்கங்கள் மற்றும் அரசு சாரா
நிறுவனங்களின் தகவல்களின்
அடிப்படையில் தகுதியான
குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை
வழங்குகிறோம்.

அதுமட்டுமல்லாமல், உதவித்
தேவைப்படும் குடும்பங்களை
அடையாளம் காண்பதற்காக களத்திற்கு
நேரடியாகச் செல்கிறோம். தகுதி உள்ள யாரும்
இத்திட்டத்திலிருந்து
விடுபடாமலிருப்பதை உறுதிச் செய்ய
விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள தாமான் பெலாங்கியில்
நடைபெற்ற ஏசான் ரஹ்மா மலிவு
விற்பனைத் திட்டத்தைப் பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இவ்வாறு கூறினார்.

ரவாங் உணவு வங்கி கடந்த ஆண்டு
அக்டோபரில் தொடங்கப்பட்டது. உலர்
உணவுகள் நன்கொடையாகப்
பெறப்பட்டு பின்னர் அவை பொட்டல
வடிவில் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நோயினால் பாதிக்கப்பட்ட குறைந்த
வருமானம் பெறுவோர் சிலாங்கூர்
சுகாதார உதவித் திட்டத்திற்கு
(பி.எஸ்.எஸ்.) விண்ணப்பிக்க தாங்கள்
உதவி வருவதாகவும் சுவா தெரிவித்தார்.

இதுவரை ரவாங்கில் வசிக்கும் 100க்கும்
மேற்பட்டோர் திட்டத்திற்கு
விண்ணப்பித்துள்ளனர் என்றும்
பெரும்பாலான விண்ணப்பங்கள்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்
மேலும் கூறினார்.


Pengarang :