NATIONAL

222 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது

ஷா ஆலம், ஜூலை 11 – சமீபத்தில் சிலாங்கூரில் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில் RM7.42 மில்லியன் மதிப்புள்ள 222 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 38 முதல் 47 வயதுடைய மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அம்மூவரும் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து வடப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID),  டத்தோஸ்ரீ முகமட் கமருடின் முகமட்டின் கூறினார்.

” ஜூலை 5 அன்று, சிப்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை  நடவடிக்கை போது முதல் சந்தேக நபர் (44), கைது செய்யப்பட்டார். அச்சமயம் 47.8 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் கெட்டமைன் கைப்பற்றப்பட்டன,” என்று கமருடின் முகமட் ஊடக சந்திப்பின் போது கூறினார்.

தொடர்ந்து, ஜூலை 6 ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள ஹோம் ஸ்டேயில் இரண்டாவது சோதனை நடவடிக்கையின் போது 38 மற்றும் 47 வயதுடைய மற்ற இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 174.2 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் யாபா மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் முகமட் கமருடின் குறிப்பிட்டார்.

மேலும், இரண்டு கார்கள், இரண்டு மோதிரங்கள் மற்றும் RM87,705 மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இரு போதைப்பொருள் கும்பலுக்கும் மூளையாகச் செயல்பட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று சந்தேக நபர்களும் முந்தைய குற்றவியல் பதிவுகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்களில் இருவர் மெத்தாம்பேட்டமைன் போதை பொருளை உட்கொண்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரணைக்காகச் சந்தேக நபர்கள் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :