NATIONAL

திறந்த டோல் கட்டண வசூல் முறை 2025ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜூலை 11- டோல் கட்டணச் சாலைகளில் பல்வகை
விரைவுத் தட போக்குவரத்து முறை (எம்.எல்.எப்.எப்.) எதிர்வரும் 2025ஆம்
ஆண்டுவாக்கில் அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

இந்த திட்ட அமலாக்கம் தொடர்பில் நெடுஞ்சாலை ஒப்பந்த
நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக
அவர் சொன்னார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இறுதிவாக்கில் இந்த எம்.எல்.எப்.எப். திட்டத்தை
அமல்படுத்துவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களின்
ஒப்புதலை விரைந்து பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம் என அவர்
தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் பல்வேறு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டியுள்ளது. இத்திட்டத்தில் அதிகமான ஒப்பந்த நிறுவனங்கள்
சம்பந்தப்பட்டுள்ளதோடு சட்ட அம்சங்கள், அமலாக்கம், டோல் கட்டண
வசூல் தொழில்நுட்ப உருவாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள
வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆர்.டி.எம். தொலைக்காட்சியில் நேற்று இடம் பெற்ற “திறன்மிக்க மற்றும்
நவீன போக்குவரத்து மேலாண்மை“ எனும் தலைப்பிலான விவாத
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.

கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய இந்த திறந்த டோல் கட்டண
வசூல் முறையின் வழி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் எளிதாக
டோல் கட்டணத்தை செலுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என அவர்
தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதியில் எம்.எல்.எப்.எப். முறையை பரீட்சார்த்த முறையில்
அமல்படுத்துவதற்கு சுங்கை பீசி நெடுஞ்சாலை (பெஸ்ராயா) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நந்தா கடந்த மார்ச் மாதம் 27ஆம்
தேதி கூறியிருந்தார்.


Pengarang :