NATIONAL

கடும் சவால்களுக்கு மத்தியிலும் சிலாங்கூரை ஹராப்பான் தக்கவைத்துக் கொள்ளும் – ஆய்வாளர்கள் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 11- பொருளாதார நெருக்கடி, பிரிந்து கிடக்கும் மலாய்
சமூகத்தின் ஆதரவு ஆகிய காரணங்களால் கடும் சவால்கள் நிலவிய
போதிலும் தங்கள் வசமுள்ள மூன்று மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி
செம்பிலான், பினாங்கு ஆகியவற்றை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி
தக்க வைத்துக் கொள்ளும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

ஹராப்பான் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பைத் தந்து வரும் பெரிக்கத்தான்
நேஷனல் கூட்டணி, அதிகரித்து வரும் அதிருப்தி, மலாய் சமூகத்தில்
பெருகி வரும் பழைமைவாதப் போக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது
செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் அதேவேளையில் ஒற்றுமை
அரசாங்கம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குக் கடும் மிரட்டலையும்
கொடுக்கும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி தனது நிலையை வலுப்படுத்திக்
கொள்வதற்கு பெரிக்கத்தான் முனைப்பு காட்டி வருவதோடு நடப்பு
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திறன் மீது அதிருப்தி
கொண்ட தரப்பினரின் ஆதரவை ஈர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு
வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த ஆறு
மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை
பிரதிபலிக்கும் என்பதை அரசாங்க, எதிர்க்கட்சி தலைவர்களும் அரசியல்
ஆய்வாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

ஒற்றுமை அரசாங்கம் ஆட்சியை அமைத்து ஏறக்குறைய ஒன்பது
மாதங்கள் ஆகின்றன. ஹராப்பான் வசமுள்ள மூன்று மாநிலங்களில்
வழங்கப்பட்ட சேவையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அந்த        கூட்டணிக்குச் சாதகமான சூழல் நிலவுவதை அரசியல் பார்வையாளர்கள்
ஒப்புக் கொள்கின்றனர்.

கடந்த 15ஆம் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொள்கையில்
இந்த மூன்று மாநிலங்களிலும் ஹராப்பான் வாக்கு வங்கி தொடர்ந்து
வலுவாகவே உள்ளதாக நுசாந்தாரா கழகத்தின் வியூக ஆய்வு உயர்
அதிகாரியான அஸ்மின் ஹசான் கூறினார்.

ஹராப்பான் கூட்டணியின் பங்காளியான தேசிய முன்னணி மற்றும் அதன்
தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி மீதான அதிருப்திக்கு
மத்திதியிலும் ஹராப்பான் மீதான ஆதரவு இம்மாநிலங்களில் தொடர்ந்து
வலுவுடன் உள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :