NATIONAL

மாநிலத் தேர்தலை மஇகா, மசீச புறக்கணிக்கவில்லை- அம்னோவுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு

கோலாலம்பூர், ஜூலை 11- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மஇகா மற்றும் மசீசவின் முடிவு
அக்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன எனப் பொருள்படாது.

மாறாக, அக்கூட்டணியின் சார்பாக போட்டியிடும் அம்னோ வேட்பாளர்கள்
தேர்தலில் வெல்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளதைக் கருத்தில்
கொண்டு கருத்திணக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு கேமரன் மலை நாடாளுமன்றத் இடைத் தேர்தல்
நடைபெறுவதற்கு முன்பாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக
மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான கேமரன் மலைத் தொகுதியில்
அம்னோ போட்டியிட்டு வெற்றியும் பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
புறக்கணிப்பு என்ற விஷயமே இங்கு எழவில்லை. அம்னோவின் வெற்றி
வாய்ப்பு பிரகாசமாக உள்ளதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். ஆகவே,
அவர்கள் போட்டியிடுவதற்கு நாங்கள் வழிவிடுகிறோம் என்றார் அவர்.

தனிக்கட்சியின் வெற்றியைக் காட்டிலும் தேசிய முன்னணியின்
வெற்றிதான் முக்கியம் என்று நேற்று இங்கு நடைபெற்ற தேசிய
முன்னணியின் உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் மஇகாவும் மசீசவும் போட்டியிடாத போதிலும், தேசிய
முன்னணியின் பங்களிக் கட்சிகள் என்ற முறையில் அம்னோ
வேட்பாளர்களின் வெற்றிக்காக அவ்விரு கட்சிகளின் தேர்தல் இயந்திரமும்
முழுவீச்சில் பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இதே கருத்தைப் பிரதிபலித்த மசீச துணைத் தலைவர்
டத்தோ டாக்டர் மா ஹாங் சூன், அனைத்து மாநிலங்களிலும் வெற்றியை உறுதி செய்வதற்காக தேசிய முன்னணிக்கு ஆதரவாக தங்கள் கட்சி பிரசாரம் செய்யும் என்றார்.


Pengarang :