SELANGOR

பொது வசதிகளை மேம்படுத்த சிலாங்கூரிலுள்ள இரு ஊராட்சி மன்றங்களுக்கு வெ.82.4 லட்சம் ஒதுக்கீடு

உலு லங்காட், ஜூலை 11- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இரு ஊராட்சி
மன்றங்களில் ஆறு அடிப்படை வசதித் திட்டங்களை மேற்கொள்ள 82
லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு
ஒதுக்கியுள்ளது.

காஜாங் நகராண்மைக் கழகம் மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றம்
ஆகிய ஊராட்சி மன்றங்களுக்கு அந்நிதி வழங்கப்படுவதாக கூறிய
அமைச்சர் ஙா கோர் மிங், இத்திட்டங்கள் வெகு விரைவில்
ஆரம்பிக்கப்பட்டு கூடிய பட்சம் அடுத்தாண்டுவாக்கில் முற்றுப் பெறும்
என்று சொன்னார்.

மக்கள் நலன் சார்ந்த சேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதை
நோக்கமாக கொண்ட அமைச்சின் இலக்கிற்கேற்ப இந்த அடிப்படை வசதி
மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சேவைத் தரமும் மக்களின் சுபிட்சமும் தொடர்ந்து மேம்பாடு
காண்பதற்கான திட்டங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதை உறுதி
செய்யும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களுடன்
ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி
வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாமான் தாசேக்
செம்பாக்காவில் 790,000 வெள்ளி செலவில் சாலைகள் மற்றும் பொது
வசதிகள் தரம் உயர்த்தப்படும் என்று அவர் சொன்னார்.

இது தவிர, ஸ்ரீ கெம்பாங்கான் பாசார் ராக்யாட் சந்தையை பராமரிப்பதற்கு
300,000 வெள்ளியும் சுங்கை லோங் லாமான் நியாகா கம்யூனிட்டியில்
அலுவலகம், கழிப்பறை, மற்றும் கூரை அமைப்பதற்கு 650,000 வெள்ளியும்
செலவிடப்படும் என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற செந்தோஹான் காசே கே.பி.கே.டி. எனும்
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.


Pengarang :