SELANGOR

ஐந்து ஆண்டுகள், ஐந்து மகத்தான வெற்றிகள்- அடுத்த தவணையிலும் தொடர்வோம்- அமிருடின் சூளுரை

ஷா ஆலம், ஜூலை 11- சிறப்பான பொருளாதார அடைவுநிலை,
யதார்த்தமான மாநில வரவு செலவுத் திட்டம், முதலாவது சிலாங்கூர்
திட்ட (ஆர்.எஸ்.-1) அமலாக்கம் உள்ளிட்ட ஐந்து மகத்தான் சாதனைகளை
மாநில அரசு கடந்த தவணை காலத்தில் புரிந்துள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சவால்மிக்க இந்த ஐந்தாண்டு காலம் விலைமதிக்கத முடியாத
அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தந்துள்ள போதிலும்
நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சேர்த்து திட்டங்களை
வடிவமைப்பதில் தனக்குள்ள திறனை நடப்பு தலைமைத்துவம்
நிரூபித்துள்ளதாக அவர் சொன்னார்.

“வாருங்கள், கித்தா சிலாங்கூர் உணர்வுகளை விதைப்போம். அடுத்த
ஐந்தாண்டுகளுக்கும் தொடர்வோம்“ என்று நேற்றிரவு தனது பேஸ்புக்
பதிவில் வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் சாதனைகளை விவரித்த அமிருடின் தேசிய அளவை விட
அதிகமான பொருளாதார வளர்ச்சியை மாநிலம் அடைந்துள்ளதாகச்
சொன்னர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7
விழுக்காடாக மட்டுமே இருந்த வேளையில் சிலாங்கூரின் வளர்ச்சி 11.9
விழுக்காடாக இருந்தது. மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
அது 25.5 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியது என்றார் அவர்.

கடந்த 2020ஆம் ஆண்டிற்கு பிறகு மாநிலம் உபரி பட்ஜெட்டைத் தாக்கல்
செய்தது குறித்தும் அமிருடின் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த 2018ஆம்
ஆண்டில் 210 கோடி வெள்ளியாக மட்டுமே இருந்த மாநிலத்தின் நிதிக்
கையிருப்பு இவ்வாண்டில் 340 கோடி வெள்ளியாக உயர்வு
கண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாம் யதார்த்தமான மற்றும் சாதனைக்குரிய வரவு செலவுத்
திட்டங்களைத் தாக்கல் செய்துள்ளோம். பல்வேறு நெருக்கடியான
சூழல்களின் போது ஐந்து பொருளாதார மீட்சித் திட்டங்களையும்
அமல்படுத்தினோம் என்றார் அவர்.

தாம் மந்திரி புசாராக பதவி வகித்த காலத்தில் அடையப்பட்ட
சாதனைகளில் மற்றொரு மைல் கல்லாக விளங்குவது முதலாவது
சிலாங்கூர் திட்ட அமலாக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.

இந்த ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் 20,000 கோடி வெள்ளி மதிப்பிலான 200
திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. சிலாங்கூர் நாட்டின் பொருளாதார
மையமாக தொடர்ந்து விளங்குவதையும் மாநிலத்தின் வருமானமும்
மக்களின் வருமானமும் தொடர்ந்து உயர்வு காண்பதை உறுதி செய்யும்
நோக்கிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, மாநில அரசினால் அமல்படுத்தப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர்
மக்கள் நலத் திட்டங்களின் வாயிலாக மாநிலத்திலுள்ள பல்வேறு
நிலையிலான 70 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளன என்றார் அவர்.


Pengarang :