NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு குறித்த அறிக்கை தயார்

 மலாக்கா, ஜூலை 12 – கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பத்தாங் காலி நிலச்சரிவு குறித்த அறிக்கை தயாராக உள்ளது என்று பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

அவரது துறை மாநில அரசாங்கத்தின் கருத்துக்காகக் காத்திருப்பதால், அறிக்கை இன்னும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் மாநில சாலை சம்பந்தப் பட்டது என்பதால் அரசு நிறுவனங்களின் அறிக்கையும் கருத்துகளும் தேவை என்று நந்தா கூறினார்.

“ஜே.கே.ஆர் (பொதுப்பணித் துறை) மட்டத்தில், எங்களின் பணி முடிந்துவிட்டது. சிலாங்கூர் அரசாங்கம் கூடிய விரைவில் தனது கருத்துக்களை வழங்கும் என்று நான் நம்புகிறேன், அதனால் அறிக்கை அமைச்சரவைக்குக் கொண்டு வரப்படும், ”என்று அவர் 2023 மலேசிய ஜேகேஆர் மூத்த அதிகாரிகள் மாநாட்டை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்த அறிக்கை ஜூன் மாத இறுதியில் முடிவடைந்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பத்தாங் காலி நிலச்சரிவில் 18 பெரியவர்கள் மற்றும் 13 குழந்தைகள் உயிரிழந்தனர், 61 பேர் உயிர் தப்பினர்.

– பெர்னாமா


Pengarang :