SELANGOR

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதி செப். 15ஆம் தேதி  செயல்படத் தொடங்கும்- முதல் கட்டமாக 25 மாணவர்கள் சேர்க்கப்படுவர்

ஷா ஆலம், ஜூலை 12-  நாட்டின் முதலாவது உறை விடத் தமிழ்ப் பள்ளியாக விளங்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் உள்ள மாணவர்  தங்கும் விடுதி வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது.

மொத்தம் 200 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த விடுதியில் தொடக்கக் கட்டமாக  4 மற்றும் 5ஆம் ஆண்டு பயிலக்கூடிய 25 மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கே. உதயசூரியன் கூறினார்.

மாநில அரசு தொடக்கக் கட்டமாக வழங்கிய 300,000 வெள்ளி நிதியுதவியைக் கொண்டு இந்த தங்கும் விடுதி செயல்படத் தொடங்கும் எனக் கூறிய அவர், அடுத்தாண்டு  இந்த விடுதிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த விடுதியில் தங்கும் மாணவர்கள் அருகிலுள்ள மிட்லண்ட்ஸ் பள்ளியில்  சேர்ந்து பயில்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களின் வசதிக்காக இந்த விடுதியில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு அறையிலும் நான்கு மாணவர்கள் தங்கும் வகையில் கட்டில், மெத்தை, அலமாரி, படிப்பதற்கான மேசை, குளியல் அறை, துணிகளை உலர வைக்கும் இடம், உணவு அறை என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன.

இது தவிர, இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்காக பிரத்யேக வகுப்புகள், விளையாட்டுப் பயிற்சிகள், யோகா, சமய வகுப்புகள், மாணவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள், தலைமைத்துவ முகாம்கள், கல்விச் சுற்றுலா போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் கூட்டத்தில் செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் உறைவிடம், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட  தேவைகளை ஈடு செய்ய ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 1,000 வெள்ளி தேவைப்படுவதாகவும் உதயசூரியன் தெரிவித்தார்.

இந்த தங்கும் விடுதியை அமைப்பதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியை பாதியில் கைவிடுவதை தடுக்க முடியும் என்பதோடு மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இயலும் என்று அவர் சொன்னார்.


Pengarang :