NATIONAL

இந்தியாவில் வெள்ளம்- 12 சுற்றுப் பயணிகளின் நிலை அறிய மலேசியத் தூதரகம் முயற்சி

புது டில்லி, ஜூலை 13 – இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் 12 மலேசிய சுற்றுலாப் பயணிகள் குறித்த தகவல்களை அறிய புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகம் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

வட இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால்  பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மலைப்பாங்கான மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள முடியாத நிலையிலுள்ள குறைந்தது 12 மலேசிய சுற்றுலாப் பயணிகளைக் கண்டுபிடிக்க அவர்களின் குடும்பத்தினர் அங்குள்ள மலேசியத் தூதரக அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலேசியர்களின் நிலையைக் கண்டறிய இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான மலேசியாவின் துணைத் தூதர் அமிசல் ஃபாட்லி ராஜலி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

சில பகுதிகளில் கைப்பேசி தொடர்பு நெட்வொர்க்குகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகள் சேதமடைந்ததால் ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீட்புக்காக காத்திருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அடைய தாங்கள்  முயற்சிப்பதாக அவர்கள் கூறினர்.


Pengarang :