NATIONAL

மூன்று இந்தோனேசிய ஆண்கள் போதைப் பொருள் கடத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

மலாக்கா, ஜூலை 13 – மூன்று இந்தோனேசிய ஆண்கள், கிட்டத்தட்ட 41 கிலோகிராம் (கிலோ) எடையுள்ள போதைப் பொருளைக் கடத்தியதாக ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட அம்மூன்று பேர், குணவன், அமிருல்லா (33), மற்றும் சூர்யாதி (31) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் அடையாள ஆவணங்கள் இல்லை.

அந்த மூன்று ஆடவர்களும் 40,760 கிராம் எடையுள்ள மெத்தாம்பேட்டமைன் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் ஜூன் 28 அன்று இரவு 10.30 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள க்ளெபாங் கடற்கரையில் இந்தக் குற்றத்தைச் புரிந்ததாக நம்பப்படுகிறது.

மூவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(A) இன் கீழ் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், மேலும் அதே சட்டப் பிரிவு 39B(2) இன் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அதிகபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப் படும்.

இந்த வழக்கை அரசு துணை வழக்கறிஞர் இஷான் நசருடின் வாதாடினார். இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றம் சாட்டப்பட்ட மூவரிடம் இருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

மாஜிஸ்திரேட் நபிலா நிஜாம், இந்த வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.

 

– பெர்னாமா


Pengarang :