NATIONAL

சிலாங்கூர் சுல்தான் அவமதிப்பு- கெடா மந்திரி புசார் செயல் குறித்து அமிருடின் வருத்தம்

கோலா சிலாங்கூர், ஜூலை 13- கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி
முகமது நோர் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதித்தது குறித்து மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

கெடா மாநில பாஸ் கட்சித் தலைவரின் தனிப்பட்டத் தாக்குதல்களைத் தாம் பொருட்படுத்தாதப் போதிலும் அவரது நேற்றைய பேச்சு சிறிதும் பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் என்னை அவமானப்படுத்தினால்கூட பரவாயில்லை. ஆனால், அவர் (சனுசி)
சிலாங்கூர் சுல்தானை கூட அவமதிக்கும் அளவுக்குத் துணிந்து விட்டார் என்று அவர்
நேற்றிரவு இங்கு நடைபெற்ற புக்கிட் மெலாவதி தொகுதி நிலையிலான மடாணி
ஒற்றுமைப் பேரணியில் உரையாற்றும் போது அமிருடின் கூறினார்.

சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் சனுசி பேசியது குறித்து நான்
மிகவும் வேதனைப்படுகிறேன். சிலாங்கூர் சுல்தான் கெடா சுல்தான் போல் இல்லை என்று சனுசி தனது உரையில் கூறியிருக்கிறார்.

இதுதான் (புக்கிட் மெலாவதி) இந்த மாநிலத்தின் சுல்தான்களின் பூர்வீக இடம்.
சனுசி, முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். ஆகஸ்டு 12ஆம் தேதி
சிலாங்கூர் மக்கள் உங்களுக்கு பாடம் கற்றுத் தருவார்கள் என்று அமிருடின்
சொன்னார்.

நேற்று செலாயாங்கில் நடந்த அரசியல் கூட்டத்தில் இடம்பெற்ற சனுசியின் பேச்சை
அமிருடின் குறிப்பிட்டார். அந்த உரை நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாக
பரவி வருகிறது.

அமிருடின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதற்குச் சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல் அளித்ததை அந்த பாஸ் தலைவர் கேலி செய்துள்ளார்.

கெடா சுல்தான் மகத்தானவர். இது நகைச்சுவையல்ல. கெடா மந்திரி புசாரைப்
பாருங்கள் என்று தன்னைக் குறிப்பிட்ட சனுசி, அது போன்ற மகத்தான சுல்தான்
அமிருடின் போன்ற கோக்கியா மந்திரி புசாரைத் தேர்ந்தெடுக்க மாட்டார் எனக்
குறிப்பிட்டிருந்தார்.

கோக்கியா என்ற வார்த்தை அகராதியில் இல்லை. மாறாக தினசரி உரையாடலில் ஒரு
பொருளை அல்லது ஒரு நபரை இழிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும்
ஒரு வழக்குச் சொல்லாகும்.


Pengarang :