NATIONAL

முற்போக்கு ஊதியம் குறித்து குரல் எழுப்பும் உரிமை ரபிஸிக்கு உண்டு- சிவக்குமார் கூறுகிறார்

கப்பளா பத்தாஸ், ஜூலை 14- ஊதிய
பிரச்சனைகள் மற்றும் கொள்கைகள் மனித
வள அமைச்சின் கீழ் இருந்தாலும் நாட்டிற்கு
எது நல்லது என்பது குறித்து தனது கருத்தை
தெரிவிக்க பொருளாதார அமைச்சர் ரபிஸி
ரம்லிக்கு உரிமை உள்ளது.

முற்போக்கான ஊதிய மாதிரியை
நடைமுறைப்படுத்துவதில் நியாயமான
தன்மையை அரசாங்கம் ஆய்வு செய்து
வருவதோடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கூடும்
தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றக்
கூட்டத்தில் இந்த பிரச்சனையை அமைச்சு
முன் வைக்கவுள்ளது என்று மனிதவள
அமைச்சர் வி.சிவக்குமார் கூறினார்.

ஊதிய பிரச்சனை உண்மையில் மனித வள
அமைச்சின் அதிகார வரம்பிற்கு
உட்பட்டது. நமது நாட்டுக்கு எது நல்லது
என்று கூறுவதற்குப் பொருளாதார அமைச்சர்
என்ற முறையில் ரபிஸிக்கு உரிமை உண்டு.

இது தவிர, நாங்கள் இருவரும் தேசியப்
பொருளாதார மன்றத்தின்
உறுப்பினர்கள். நமது நாட்டிற்குச் சிறந்த
வழிமுறை என்ன என்பதை நாங்கள்
விவாதிப்போம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள தொழில்துறை பயிற்சி
நிறுவனத்திற்கு (ஐஎல்பி) பணி நிமித்தம் வருகைக்குப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.

மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின்
தலைவர் சைட் ஹுசைன் சைட் ஒஸ்மானின்
அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த
சிவக்குமார், பொருளாதாரத்தை
ஊக்குவிக்கும் திட்டங்களை ரபிஸி பகிர்ந்து
கொள்ள வேண்டுமே தவிர, மனித வள அமைச்சினால் கையாளப்படும்
முற்போக்கான ஊதிய உயர்வுக்கான
திட்டங்களை அல்ல என்றும் சொன்னார்.

தற்போதைய குறைந்தபட்ச ஊதியக்
கொள்கையைத் தவிர, பிற சம்பள
மாதிரிகளை அரசாங்கம் ஆய்வு செய்து
வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை
விளக்கமளிப்புக்குப் பின்னர் நாங்கள் முடிவு
செய்வோம். முற்போக்கு ஊதியம் ஒரு நல்ல
முன்மாதிரி. ஆனால் நாம் அதை ஒரு
முழுமையான முறையில் பார்க்க வேண்டும்
என்று அவர் கூறினார்.


Pengarang :