NATIONAL

ஓப் தாப்பிஸ் 3 சிறப்பு நடவடிக்கை- மூன்றே நாட்களில் வெ.500,000 போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜூலை 14- இவ்வாரம் திங்கள் கிழமை தொடங்கி மூன்று
நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஓப் தாப்பிஸ் 3 சிறப்பு நடவடிக்கையில்
553,927 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்களைப்
போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நடவடிக்கையில் 202,57 கிலோ மற்றும் 2,789 லிட்டர் போதைப் பொருள்
கைப்பற்றப்பட்டதோடு கஞ்சா தோட்டமும் கண்டுபிடிக்கப்பட்டது என்று
புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலன் விசாரணைத் துறையின்
இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருள் தொடர்பான
பல்வேறு குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் 14 முதல் 70 வயது
வரையிலான 4,718 நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2,272 போதைப் பித்தர்கள், 1,542 இதரக்
குற்றங்களைப் புரிந்தவர்கள், 655 போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள்
மற்றும் 249 தேடப்படும் நபர்களும் அடங்குவர் என அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது 1998ஆம் ஆண்டு அபாயகரப்
போதைப் பொருள் சட்டத்தின் (சொத்து பறிமுதல்) கீழ் 416,160 வெள்ளி
மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அறிக்கை
ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு ஓப் தாப்பிஸ் நடவடிக்கையின் கீழ் கடந்த ஜனவரி முதல்
நேற்று வரை 12,639 பேர் கைது செய்யப்பட்டு 2 கோடியே 21 லட்சத்து 58
ஆயிரத்து 480 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள்
கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :