NATIONAL

சுல்தானை நிந்திக்கும் சனுசியின் உரை; பெரிக்காத்தான் மன்னிப்பு கோர வேண்டும்-ஜூவாய்ரியா வலியுறுத்து

ஷா ஆலம், ஜூலை 14- சிலாங்கூர்
சுல்தானுக்கு எதிராக கெடா மந்திரி
புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது
நோர் வெளியிட்ட முறையற்ற மற்றும்
துடுக்குத்தனமான கருத்துக்களுக்காகப்
பெரிக்காத்தான் நேஷனல் மன்னிப்பு
கோர வேண்டும்.

சனுசியின் நடவடிக்கைகள்
ஆட்சியாளர்கள் மீதான
மலாய்க்காரர்களின் நெறிமுறையை முறையாகப்
பிரதிபலிக்கவில்லை என்று சிலாங்கூர்
மந்திரி புசாரின் அரசியல் செயலாளர்
ஜுவாய்ரியா ஜூல்கிப்லி கூறினார்.

இதன் தொடர்பில் பெரிக்காத்தான்
நேஷனல் உடனடியாக மன்னிப்பு கேட்க
வேண்டும் என்பதோடு மாநிலத்
தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது அரசியல்
உரைகளில் மாநில சுல்தானை
தொடர்படுத்துவதிலிருந்து விலகியிருக்க
வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்
என அவர் அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.

அரச அமைப்பு என்பது இறையாண்மை
கொண்ட ஒரு ஸ்தாபனம். வெறும்
வாக்குகளைப் பெறுவதற்காக ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகளில் அந்த உயரிய
அமைப்பைச் சிக்கக்கூடாது என்றும்
அவர் கூறினார்.

கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று மாநில
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா
அல்ஹாஜ் வெளியிட்ட நினைவூட்டலை
சுட்டிக்காட்டிய ஜுவாய்ரியா, எதிர்வரும்
தேர்தலில் வேட்பாளர்கள் இன, மத
அல்லது அரச உணர்வுகளை அரசியல்
ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதைத்
தவிர்க்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

பெரிக்காத்தான் மற்றும் சனுசியால்
கட்டவிழ்த்து விடப்படும்
முரட்டுத்தனமான செயல்களுக்குச்
சிலாங்கூரில் இடமில்லை என்று அவர் அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூர் மந்திரி புசாராக டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரியை நியமித்ததில்
சுல்தான் ஷராபுடினின் நம்பகத்தன்மை
குறித்து அண்மையில்
செலாயாங்கில் நடைபெற்ற அரசியல்
கூட்டத்தில் சனுசி
கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :