NATIONAL

இன்று பிரதமர் மற்றும் எலான் மஸ்க் இடையே மெய்நிகர் சந்திப்பு

புத்ராஜெயா, ஜூலை 14 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உடன் இன்று மெய்நிகர் சந்திப்பு நடத்த உள்ளார்.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் அமலாக்க நிறுவனங்களுடனான உரையாடல் அமர்வுக்குப் பிறகு பிரதமர் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்,

இந்த வாரம் மஸ்க் உடன் ஒரு சந்திப்பை நடத்தி, மாபெரும் மின்சார வாகன நிறுவனம் மலேசியாவில் மேலும் முதலீடு செய்வதற்கான வழிகளை ஆராய உள்ளதாகக் கூறினார்.

மார்ச் 1 அன்று, மலேசியாவில் பேட்டரி மின்சார வாகனங்களை (BEV) இறக்குமதி செய்வதற்கான டெஸ்லாவின் விண்ணப்பத்திற்கு தனது அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் கூறினார்.

 டெஸ்லா மலேசியாவில் ஒரு தலைமை அலுவலகத்தை நிறுவி, அதன் சேவை மையங்களை அறிமுகப்படுத்தி சூப்பர் சார்ஜர் நெட்வொர்க்கை நிறுவும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ சேவை மையம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இதற்கிடையில், டெஸ்லா நிறுவனர் மற்றும் பிரதமர் இடையேயான சந்திப்பு, மின்சார வாகன (EV) மையமாக மாறுவதற்கான நாட்டின் பயணத்திற்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று பொருளாதார நிபுணர் ஒருவரால் நம்பப்படுகிறது.

சன்வே பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் யே கிம் லெங், உலகளாவிய மின்சார வாகன நிறுவனத்திற்கும் மலேசியத் தலைவருக்கும் இடையிலான பயனுள்ள கலந்துரையாடல், மலேசியப் பொருளாதாரத்திற்குப் பயனளிக்க வழிவகுக்கும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :