SELANGOR

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைச் சமாளிக்க 30,000 சிலாங்கூர்வாசிகளுக்கு மாதம் வெ.3,600 உதவித் தொகை

ஷா ஆலம், ஜூலை 14- சமையல் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருள்களை வாங்குவதற்கான உதவித் தொகையாக மாதம் 3,600
வெள்ளியைப் பெறும் தகுதியை சிலாங்கூரைச் சேர்ந்த 30,000 பேர்
பெற்றுள்ளனர். இந்த நிதியைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கான
உபகரணங்களையும் வீட்டுத் தேவைக்கான பொருள்களையும் அவர்கள்
வாங்க இயலும்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர்
நல்வாழ்வு உதவித் திட்டம் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த
திட்டம் இன்று வரை தொடரப்படுகிறது.

மாநிலத்தின் வளங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது இந்த பிங்காஸ்
திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. 15 ஆண்டுகளுக்கு
முன்னர் மக்கள் கூட்டணி ( இப்போது பக்கத்தான் ஹராப்பான்) வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து மாநில மக்கள் நலத் திட்டங்களின் பலனை உணர
ஆரம்பித்தனர்.

பிங்காஸ் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னர் ஸ்மார்ட் சிலாங்கூர்
காசே ஈபு (கிஸ்) மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ்-ஐ.டி.
என்ற திட்டங்கள் வாயிலாக சிலாங்கூர் மக்களுக்கு உதவிகள்
வழங்கப்பட்டு வந்தன.

இவ்விரு திட்டங்களின் கீழ் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மாதம் 200
வெள்ளி அதாவது ஆண்டுக்கு 2,400 வெள்ளியை உதவித் தொகையாக
பெற்று வந்தனர். தேவைகள் அதிகரித்து வரும் நடப்புச் சூழலைக்
கருத்தில் கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த
திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பான தகவலை கடந்த 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது வெளியிட்டிருந்தார்.

அதன்படி அவ்விரு திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பிங்காஸ் என
மறுபெயரிடப்பட்டது. அதே சமயம், பயனாளிகளுக்கான உதவித்
தொகையும் மாதம் 300 வெள்ளியாக அதாவது ஆண்டுக்கு 3,600
வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவோரின் எண்ணிக்கையும் 21,000
பேரிலிருந்து 30,000 பேராக அதிகரிக்கப்பட்டது. இந்த பிங்காஸ் திட்டத்தின்
கீழ் இதுவரை மாநிலத்திலுள்ள 180,000 பேர் பயன் பெற்றுள்ளனர்.


Pengarang :