ANTARABANGSA

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீண்டும் சிறைக்குச் செல்லக்கூடும்

ஜோகன்னஸ்பர்க், ஜூலை 14 – தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (81) மீண்டும் சிறைக்குச் செல்ல கூடும் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு நீதிமன்றம் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

உடல்நலக் காரணங்களுக்காகச் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்வது சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிறைத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், வெற்றிக்கான வாய்ப்புகள் இல்லா நிலையில் அரசியலமைப்பு நீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

ஜூமா 2009 முதல் 2018 வரை அதிபராக இருந்தார். முன்னாள் அரச தலைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவருமான அவர் 2021 ஆம் ஆண்டு, ஊழல் வழக்கு விசாரிக்கும் குழுவின் முன் சாட்சியமளிக்க மறுத்ததால் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் எட்டு வாரங்களுக்கு குறைவான சிறைக்குத் தண்டனைக்குப் பிறகு, அவர் உடல் நலப் பிரச்சனை காரணமாக விடுவிக்கப்பட்டார்.

அப்போது சிறை நிர்வாகத்தின் தலைவரும், ஜூமாவின் நெருங்கிய நம்பிக்கையாளருமான ஆர்தர் ஃப்ரேசர் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

முன்னதாக, ஜுமாவின் விடுதலைக்குப் பரோல் வாரியமும் ஒப்புதல் அளிக்கவில்லை.

– பெர்னாமா


Pengarang :