SELANGOR

அந்நிய முதலீடுகள் மூலம் சிலாங்கூரில் 18,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கம்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜூலை 14- கடந்த ஐந்தாண்டுகளில் சிலாங்கூருக்கு கொண்டு
வரப்பட்ட அந்நிய முதலீடுகள் மூலம் மாநில மக்களுக்கு 18,000 வேலை
வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்பான ஊதியத்துடன் கூடிய தரமான வேலை வாய்ப்புகளை
உருவாக்கித் தருவதில் மாநில அரசுக்கு உள்ள ஆற்றலை இந்த
எண்ணிக்கை நிரூபிக்கிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் 1,100
துறைகளில் 18,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கடந்த
ஐந்தாண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளதை ஆவணப் பதிவுகள்
காட்டுகின்றன.

நாம் நல்ல ஊதியத்துடன் கூடிய சிறப்பான வேலை வாய்ப்புகளை மாநில
மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவோம். நமது இந்த நடவடிக்கை வெளி
மாநில மக்கள் சிலாங்கூருக்கு படையெடுக்க முக்கிய காரணமாக
விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை ஒளிபரப்பான
பிரேக்ஃபஸ்ட் கிரீல் எனும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொழில் துறைகளில் குறிப்பாக வான்போக்குவரத்து மற்றும் வாகனத்
தொழில்துறையில் திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதற்காக
மாநில அரசு பயற்சித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும்
என்றும் அவர் சொன்னார்.

இத்துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிலாங்கூர்
தொழில்திறன் மேம்பாட்டு மையம் (எஸ்.டி.டி.சி.) முக்கிய
நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை நல்கும் எனவும் அமிருடின் கூறினார்.


Pengarang :