NATIONAL

பினாங்கை ஹராப்பான் தக்கவைத்துக் கொண்டால் கூன் இயோ முதலமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பார்

கோலாலம்பூர், ஜூலை 14- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலில் பினாங்கு மாநிலத்தை ஜசெக தக்க வைத்துக் கொண்டால்
முதலமைச்சர் பதவியை இரண்டாம் தவணையும் தொடர்வதற்கு சௌ
கூன் இயோ பெயரை முன்மொழிய கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.

நேற்றிரவு தமது தலைமையில் நடைபெற்ற கட்சி வேட்பாளர் தேர்வுக்
குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக ஜசெக
தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

இந்த குழுவில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், துணைத் தலைவர்
கோபிந்த் சிங் டியோ, உதவித் தலைவர்களான ஙா கோர் மிங் மற்றும்
எம். குலசேகரன் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நியமனம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம்
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின்
தலைவரான அவர் இந்நியமனத்திற்கு தனது வாழ்த்துகளைத்
தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மாநிலத் தேர்தலில் ஹராப்பான்-தேசிய முன்னணி கூட்டணி
வெற்றி பெற்றால் ஜசெக பிரதிநிதிகளை உட்படுத்திய ஆட்சிக்குழு
உறுப்பினர் பதவிகளில் பெரிய அளவில் புதுப்பிப்பு பணி
மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

மாநிலத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜசெக வேட்பாளர்களின்
முழுமையான பட்டியல் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் வேட்பாளர்
தேர்வுக்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜசெக வேட்பாளர்கள் பட்டியல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு ஒரு
வாரத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :