SELANGOR

கிள்ளான் பண்டார் பாரு தொகுதியில் சாலைகளைச் சரி செய்ய RM300,000 ஒதுக்கீடு 

ஷா ஆலம், ஜூலை 14: கிள்ளான் உத்தாமாவைச் சுற்றியுள்ள சாலைகளைக் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சரிசெய்ய  கிள்ளான் பண்டார் பாரு தொகுதி, RM300,000 த்தைச் செலவு செய்துள்ளது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (பிஎஸ்பி) மூலம் பெறப்பட்ட ஒதுக்கீடு களைப் பயன்படுத்தி இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பொறுப்பாளர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்தார்.

“இந்த முறை நாங்கள் கிள்ளான் உத்தாமாவில் அதிக கவனம் செலுத்துகிறோம், ஏனெனில் 2018இல் இந்த பகுதி பண்டார் பாரு கிள்ளான் தொகுதியில் சேர்க்கப்படவில்லை, இதனால் பல சாலைகள் மோசமாகச் சேதமடைந்துள்ளன.

“பண்டார் பாரு தொகுதியில் இவ்விடம் இடம்பெற்றவுடன் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக RM300,000 ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைகளைச் சரிசெய்தல் மற்றும் மேம்படுத்துதலில் கவனம் செலுத்தினோம்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சாலையைச் சீரமைப்பதுடன் குறிப்பிட்ட நிதியைச் செலவிட்டு அப்பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க வடிகால்கள் மேம்படுத்தப்பட்டன எனத் தெரிவித்தார்.


“நாங்கள் வழங்கும் வசதிகள் மூலம் குடியிருப்பாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை நல்ல முறையில் செலவிடுவதை உறுதி செய்வதற்காகப் பூப்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடுகளையும் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :