SELANGOR

ரஹ்மா விற்பனைத் திட்டம்- 3 கோடி வெள்ளி செலவிடப்பட்டது, 11 லட்சம் பேர் பயன் பெற்றனர்

தும்பாட், ஜூலை 14- இவ்வாண்டு ஜூன் மாதம் வரை ரஹ்மா மலிவு
விற்பனைத் திட்டத்திற்கு உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சு 3 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ள வேளையில்
அத்திட்டத்தின் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

இந்த விற்பனைத் திட்டத்தின் மூலம் பொது மக்கள் பொருள்களை மானிய
விலையில் மட்டுமல்லாது சந்தையை விட மிகவும் குறைவான
விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக துணையமைச்சர்
ஃபவுஸியா சாலே கூறினார்.

உதாரணத்திற்கு ஒரு தட்டு ஏ கிரேட் முட்டை சந்தையில் 18.00
வெள்ளிக்கு விற்கப்படும் வேளையில் ரஹ்மா திட்டத்தின் கீழ் 13.00
வெள்ளிக்கு கிடைக்கிறது. சந்தையில் கோழி ஒரு கிலோ வெ.9.40
விலையில் விற்கப்படும் நிலையில் இங்கு வெ.6.80 என்ற விலையில் பெற
முடிகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள லாமான் வாரிசான் கம்போங் லாவுட்டில் ரஹ்மா விற்பனைத்
திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கும் மானியத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டத்
தரப்பினரும் உதவித் தேவைப்படுவோரும் பெறுவதை உறுதி செய்யும்
நோக்கில் இந்த ரஹ்மா மலிவு விற்பனை நடத்தப்படுகிறது என்று அவர்
கூறினார்.

இதனிடையே, அண்மையில் ஏற்பட்ட பால்மாவு விலையேற்றத்தைக்
கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுடன் அமைச்சு
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஃபவுஸியா தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து சாதகமான
பதில் வந்துள்ளது. இதன் தொடர்பில் விரைவில் இறுதி முடிவு
காணப்படும் என்றார் அவர்.


Pengarang :