NATIONAL

கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் விரைவு பஸ் தீப்பற்றியது- 42 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

குவாந்தான், ஜூலை 17- நாற்பத்திரண்டு பயணிகளுடன் பயணித்த விரைவு
பஸ் ஒன்றில் தீடிரென தீப்பற்றியது. இச்சம்பவம் கோலாலம்பூர்- காராக்
நெடுஞ்சாலையின் 52.5வது கிலோ மீட்டரில் பெந்தோங், ஊத்தான்
லிப்போர் லெந்தாங் அருகே நேற்று முனதினம் இரவு நிகழ்ந்தது.

இந்த தீவிபத்து தொடர்பில் இரவு மணி 11.15 அளவில் தாங்கள் தகவலைப்
பெற்றதாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர்
ஒருவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பெந்தோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு
அதிகாரிகள் மற்றும் இரு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இரு
தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
சொன்னார்.

அந்த பஸ் காஜாங்கிலிருந்து கோத்தா பாரு நோக்கிச் சென்று
கொண்டிருந்த போது அதன் இயந்திரப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றியதாக
அவர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் அந்த பஸ் முற்றாக சேதமடைந்தது. எனினும் அதிலிருந்த
இரு ஓட்டுநர்கள் மற்றும் 42 பயணிகள் காயமின்றி உயிர்த்தப்பினர் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜண்டா பாய்க் தன்னார்வலர் தீயணைப்பு குழுவின் ஆறு
உறுப்பினர்களுடன் மேற்காள்ளப்பட்ட இந்த தீயணைக்கும் பணி பின்னிரவு
12.40 மணியளவில் முடிவுக்கு வந்தது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :