NATIONAL

மாநிலத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு, இடம் கிடைக்காதவர்கள் ஜசெகவின் முடிவை ஏற்க வேண்டும்- அந்தோணி லோக்

ஜோர்ஜ் டவுன், ஜூலை 17- வரும் மாநிலத் தேர்தல்களில் மீண்டும்
போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள்
கட்சியின் முடிவை ஏற்று புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள்
எனத் தாம் எதிர்பார்ப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி
லோக் கூறினார்.

ஜசெக பினாங்கை கடந்த மூன்று தவணைகளாக ஆட்சி புரிந்து வரும்
நிலையில் எதிர்கால மாற்றத்திற்கான கட்சியின் திட்டங்களுக்கு ஏற்ப புது
முகங்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக
அவர் சொன்னார்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் போது மீண்டும் வாய்ப்பு
வழங்கப்படாத நடப்பு உறுப்பினர்கள் உள்பட அனைவரும் அதனை ஏற்றுக்
கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்டவடிக்கை அவர்களை கைவிட்டதாக பொருள்படாது. மாறாக,
கட்சியில் புதிய இரத்ததை பாய்ச்சுகிறோம் என்பதே இதன் பொருளாகும்
என்று நேற்று இங்கு நடைபெற்ற பினாங்கு ஜசெகவின் நிதி திரட்டும்
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜசெகவின் மூத்த தலைவர் டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்,
அமானா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சாபு. கெஅடிலான் கட்சியின்
செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில ஜசெக இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியலை
வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அந்தோணி லோக், தாம்
உள்பட ஐவர் கொண்ட குழு அந்த பட்டியலை இறுதி செய்யும் என்றார்.

பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
கடந்த 2013 மற்றும் 2018 பொதுத் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்ட
அனைத்து 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.


Pengarang :