NATIONAL

வாகனப் பழுதுபார்ப்புப் பட்டறைகள் மெக்கானிக் விபரங்களைக் காட்சிக்குக் வைக்க வேண்டும்- புதிய விதிமுறை அமல்

கோலாலம்பூர், ஜூலை 17- மெக்கானிக்குகளின் பெயர் மற்றும் அவர்களின்
பணித் தகுதி குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியலை வாகனப்
பழுதுபார்ப்பு பட்டறை உரிமையாளர்கள் காட்சிக்கு வைக்க வேண்டும்.

தகுதி உள்ள மெக்கானிக்குகளைக் கொண்ட வாகன பழுதுபார்ப்பு
பட்டறைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வகை செய்யும்
நோக்கில் இந்த விதிமுறை அமல் செய்யப்படுவதாக உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப்
கூறினார்.

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி அமலுக்கு வந்த 2022 பயனீட்டாளர்
பாதுகாப்பு (பழுதுபார்ப்பு பட்டறை தகவல் வெளியிடல்) (திருத்தப்பட்டது)
விதிமுறையில் இடம் பெற்றுள்ள சில மேம்படுத்தப்பட்டுள்ள ஷரத்துகளில்
இதுவும் அடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த புதிய விதிமுறையின் வாயிலாக வாகனப் பழுதுபார்ப்பு பட்டறை
நடத்துநர்கள் தகுதி உள்ள மெக்கானிக்குகளை வேலைக்கு
அமர்த்துவதற்கும் தங்களிடம் உள்ள மெக்கானிக்குகளுக்கு உரிய
பயிற்சிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.

இது தவிர வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் குறித்த
தெளிவான விபரங்களையும் பட்டறை உரிமையாளர்கள் வழங்க
வேண்டும். குறிப்பாக அந்த உதிரி பாகங்கள் புதியவையா?
பயன்படுத்தப்பட்டவையா? அல்லது மறுசூழற்சி செய்யப்பட்டவையா?
என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 22ஆம்
தேதி அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெற்றன. இந்த விதிமுறை
கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வரவிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொழில்துறையினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்
வழி அதன் அமலாக்கம் ஓராண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Pengarang :